16. அருள்மிகு வைத்தியநாதர் கோயில்
இறைவன் வைத்தியநாதர்
இறைவி தையல்நாயகி
தீர்த்தம் சித்தாமிர்த தீர்த்தம்
தல விருட்சம் வேம்பு
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் புள்ளிருக்கு வேளூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'வைத்தீஸ்வரன் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. சீர்காழிக்கு தென்மேற்கே 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் இரயில் நிலையம் உள்ளது. பேருந்தில் சென்றால் கோயில் எதிரிலேயே இறங்கலாம்.
தலச்சிறப்பு

Vaidheeswaran Koil Gopuramபுள் - பறவை (சடாயு, சம்பாதி என்னும் இரு பறவைகள்), இருக்கு - ரிக் வேதம், வேள் - முருகன் ஆகியோர் பூசித்த தலமாதலால் 'புள்ளிருக்குவேளூர்' என்று பெயர் பெற்றது. சிவபெருமான் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் 'வைத்தீஸ்வரன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

Vaidheeswaran Koil AmmanVaidheeswaran Koil Moolavarமூலவர் 'வைத்தியநாதர்' என்னும் திருநாமத்துடன், பெரிய நாகாபரணம் சூடி, மேற்கு நோக்கி, லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 4448 வகையான வியாதிகளைத் தீர்க்கும் வைத்தியநாதனாக இத்தலத்து இறைவன் அருள்புரிகின்றார். இங்கு தரப்படும் பிரசாதம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றது. அம்பிகை 'தையல்நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அம்பிகை சன்னதி முன் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உப்பு, மிளகு ஆகியவற்றை சிலர் சித்தாமிர்த குளத்தில் கரைத்தும், சிலர் அம்மன் சன்னதி முன்பு கொட்டியும் பிரார்த்தனை செய்கின்றனர்.

Vaidheeswaran Koil Muruganஇத்தலத்து முருகப் பெருமான் முத்துக்குமார சுவாமியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். சூரபத்மனை வதம் செய்வதற்காக இத்தலத்து சுவாமியை முருகப்பெருமான் பூஜை செய்து வழிபட்டார். இவருக்கு நடக்கும் அர்த்தசாம பூஜை புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால்சாதம், பால் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

இராமாயணத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவனைத் தடுத்து தனது உயிரை இழந்த சடாயுவை இராமபிரான் இங்கு தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு 'சடாயு குண்டம்' என்று பெயர். பிரகாரத்தைச் சுற்றி வரும் இந்த குண்டம் உள்ளது.

Vaidheeswaran Koil Angarahanநவக்கிரகங்களில் செவ்வாய் தலமாகக் கருதப்படுகிறது. ஒரு சமயம் அங்காரகனுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டது. அப்போது இத்தலத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும் என்று அசரீரி கேட்டது. அங்காரகன் இங்கு வந்து வைத்தியநாதப் பெருமானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். செவ்வாய்க்கு தனி சன்னிதி உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், செவ்வாய் தசை நடப்பவர்களும் இங்கு வந்து அம்மையப்பரையும், முத்துக்குமார சுவாமியையும், பின்னர் அங்காரகனுக்கு அர்ச்சனையும் செய்து வழிபட்டு நல்வழி பெறலாம்.

இக்கோயிலில் கிழக்கில் பைரவரும், மேற்கில் வீரபத்திரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் காளியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். நவக்கிரகங்கள் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.

இராமன், இலக்குவன், முருகப் பெருமான், ரிக் வேதம், ஏழு முனிவர்கள், சடாயு, சம்பாதி ஆகியோர் வழிபட்ட தலம்.

இத்தலத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் பிரம்மோற்சவம் சுவாமிக்கும், தை மாதம் பிரம்மோற்சவம் முத்துக்குமார சுவாமிக்கும் நடைபெறுகிறது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com